கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது இது தரப்பு மோதலில் அல்ல; அவர்களை கர்நாடக வனத்துறை திட்டமிட்டே கொடூரமாக படுகொலை செய்திருக்கிறது என்பது அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. இவ்வளவுக்கு பிறகும் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் வட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த வனத் துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும், அப்போது வனத்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை கூறிய நிலையில், அது அப்பட்டமான பொய் என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.