இனி 'எல்லாமே ஆன்லைன்' தான்! பொதுப்பணித்துறை டெண்டர்களில் அதிரடி மாற்றம்
தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறை (PWD) டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில், ஒப்பந்ததாரர் தேர்வில் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது. ஒப்பந்ததாரர் தேர்வில் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பது, தனிநபருக்கு ஏற்ப நிபந்தனைகளை உருவாக்குவது, அல்லது குறிப்பிட்ட சிலருக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ விதிகளை வகுப்பது போன்ற போட்டியை முடக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை செயலாளர் வெளியிட்டுள்ள இந்த அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்ததாரர் தேர்வை 100 சதவீதம் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்த வேண்டும் என்றும், டெண்டர் கோரும் அதிகாரி அதற்குப் போதுமான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, வெளிப்படைத்தன்மையைப் பாதிக்கும் எந்தவொரு தலையீட்டையோ அல்லது நேரடித் தொடர்பையோ அனுமதிக்கக் கூடாது என்றும், ஒப்பந்ததாரர்களிடம் போட்டியை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் போடப்படும் 'பேக்கேஜ் டெண்டர்'களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. recommended by
தகுதி வாய்ந்த அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் போட்டியில் பங்கேற்க நியாயமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, ஒருவேளை ஒப்பந்ததாரர் தகுதிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது டெண்டர் நிராகரிக்கப்பட்டாலோ அதற்கான முறையான காரணங்களை ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டுக் குழுக்கள் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.