‘அகத்தியர் - ஒருமைப்பாட்டின் குரு’ தமிழாக்க நூலை வெளியிட்டார் குடியரசு துணைத் தலைவர்
புதுடெல்லி: 'அகத்தியர் - ஒருமைப்பாட்டின் குரு’ எனும் தமிழாக்க நூலை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். டெல்லியிலுள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், கலைமகள் வெளியிடான இந்த தமிழாக்க நூலினை சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியதாவது: “தமிழ் இலக்கியம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியில் 95 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்படுகிறது கலைமகள் இதழ். தமிழறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், அறிவியலாளர்கள் மற்றும் தேசியத் தலைவர்கள் பலர் தங்களது எழுத்துகளால் கலைமகளின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் உயர்த்தி உள்ளனர். அரசர்களையும் அரசியல் அமைப்புகளையும் நாம் நினைவுகூருகிறோம். ஆனால் உண்மையான ஒருமைப்பாட்டை உருவாக்கியவர்கள் நாட்டின் முனிவர்களும் ரிஷிகளும்தான். அவர்களில் அகத்தியர் இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மிக ஒற்றுமையின் மிகப் பெரிய அடையாளமாகத் திகழ்கிறார். வட இந்திய மற்றும் தென்னிந்திய மரபுகளில் சமமாகப் போற்றப்படுபவர் அகத்தியர். இவர், இமயமலை முதல் இந்து மகாசமுத்திரம் வரை பரந்து விரிந்த பாரதத்தின் ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்குகிறார்.
தமிழகத்தின் பொதிகை மலையும் காவிரியும் அகத்தியரை நினைவூட்டுகின்றன. தமிழ் இலக்கண வளர்ச்சிக்கும் தமிழ்ச் சங்க மரபுக்கும் அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ளார். பாரதத்தின் வடக்கு – தெற்கு கலாச்சார இணைப்பை அகத்தியர் பிரதிபலிக்கிறார். பாரதத்தின் மொழிகள் ஒன்றுக்கொன்று போட்டியிடுபவை அல்ல. மாறாக, பரஸ்பர மரியாதை மற்றும் நீண்டகால கலாச்சாரப் பரிமாற்றங்களின் மூலம் ஒன்றையொன்று வளப்படுத்திய சகோதர மொழிகள் என்பதையும் அகத்தியரின் மரபு உணர்த்துகிறது. தமிழைக் கொண்டு வளர்ந்தவர்கள் அதிகம். ஆனால், தமிழுக்காக உழைத்தவர்கள் இன்று ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணியும், தியாக வாழ்வும் சரியான முறையில் அனைவருக்கும் கொண்டு செல்லப்படாதது வருத்தத்தை அளிக்கிறது. கரையானுக்கு இரையாக வேண்டிய தமிழைக் காத்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா. பாரதத்தின் ஒற்றுமை என்பது இன்றைய கருத்தாக்கம் அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முனிவர்களும் ஞானிகளும் வளர்த்தெடுத்த தொன்மையான நாகரிக உண்மை என்பதை அகத்தியரின் வாழ்க்கையும் பாரம்பரியமும் நமக்கு நினைவூட்டுகின்றன.
அனைத்து மொழிகளுக்கும் சிறப்புகள் உள்ளன. சிலர் மொழி பேதங்களை வளர்த்து வீண் விவாதங்களை, பிரிவினை எண்ணங்களை வளர்க்கின்றனர். பாரதத்தில் எந்த சக்தியாலும் பிரிவினையை ஏற்படுத்த முடியாது. இளைஞர்களுக்கு நமது பண்பாடு கலாச்சாரம் பற்றி நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் வகையில் விவாதங்கள் நடைபெற வேண்டும். தேசியம் என்றாலே தமிழுக்கு எதிரானது என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதை தகர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் அகத்தியர் பெயரால் அகத்தீஸ்வரர் கோயில் என அமைந்திருக்கின்றன. காசியிலும் தமிழகத்திலும் ஒரே பெயரில் கோயில் அமைந்திருப்பது, நமது பண்பாட்டின் ஒருமைப்பாட்டுக்கு சான்று. ஆங்கிலேயர்கள் வராமல் இருந்தால் இந்தியா ஒன்றுபட்டிருக்காது என்ற கருத்தாக்கம் என்பது இட்டுக் கட்டியது. பாரதத்தின் பண்பாடும் கலாச்சாரமும் நம்மை எப்பொழுதும் இணைத்தே வந்துள்ளது. பாரதத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்துத் திசைகளிலும் அகத்தியர் குறித்த செய்திகள், கதைகள் மற்றும் மரபுகள் பரவி உள்ளன.
இவற்றை, ஆய்வின் அடிப்படையில் நூலாசிரியர்கள் மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார். அகத்தியரின் பெருமையையும் பாரதத்தின் கலாச்சார ஒருமைப்பாட்டையும் உலகளவில் எடுத்துச் செல்லும் முக்கிய நூலாக இது அமையும்” என்று அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில பாரதிய பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர், கலைமகள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், ஆங்கில நூலாசிரியர்களான ஓ. ஷாமா பட் மற்றும் டாக்டர் எம்.என்.சுதா, நூலின் தமிழாக்கத்தை செய்த பேராசிரியர் கல்யாணி, செம்மொழி தமிழாய்வு மத்திய ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.