சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி குறித்த கள ஆய்வு: ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி குறித்த கள ஆய்வு அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் குழுக்கள் சமர்ப்பித்தன. அதில் தனித்துப் போட்டி, உட்கட்சி பிரச்சினை உட்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தோல்வியடைந்தது. குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தோற்றது அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக 36 பேர் கொண்ட 19 குழுக்களை (குழுவுக்கு தலா 2 பேர்) திமுக தலைமை அமைத்தது. இக்குழுக்கள் ஜூன் 10-ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி திமுக கள ஆய்வுக் குழுக்கள் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தன.
அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை கள ஆய்வுக் குழுவினர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சென்னையில் நேற்று சமர்ப்பித்தனர். சென்னையில் 14 தொகுதிகளில் மட்டும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோரிடம் கருத்துகளைக் கேட்டு சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதில் சில குழுக்கள் மட்டும் அறிக்கையை சமர்ப்பிக்க கூடுதல் நேரம் கேட்டதால், அவர்களுக்கு நாளை (ஜூன் 12) வரைகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
உட்கட்சி பிரச்சினை
இதுதவிர முதல்கட்டமாக 6 குழுக்களுடன் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது வரும் தேர்தல்களில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். மாவட்ட எண்ணிக்கையை உயர்த்துதல், உட்கட்சி பிரச்சினைகளை தொடர விடாமல் தலைமை உடனே தலையிட்டு தீர்க்க வேண்டும்.