கால்களின் திருவிழா இன்று கோலாகல தொடக்கம் | FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று நள்ளிரவு கோலாகலமாக தொடங்குகிறது. வரும் ஜூலை 19 வரை நடைபெறும் இந்த திருவிழாவை இம்முறை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. முதன்முறையாக 48 அணிகள் கால்பந்து திருவிழாவில் பங்கேற்கின்றன. 39 நாட்கள் நடைபெறும் இந்த கால்களின் திருவிழாவில் மொத்தம் 104 போட்டிகள் 16 மைதானங்களில் நடைபெற உள்ளன. முதன்முறையாக 32 அணிகள் பங்கேற்கும் நாக் அவுட் சுற்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு முன்பு உலகக் கோப்பைத் தொடரானது 1998-ம் ஆண்டு பிரான்சில் நடந்த போட்டிகளின் போதுதான் கடைசியாக விரிவுபடுத்தப்பட்டது.
அதன்பின்னர் நடந்த கடந்த ஏழு உலகக் கோப்பை தொடர்களும் 32 அணிகள் மற்றும் 64 போட்டிகள் கொண்ட வடிவத்திலேயே நடத்தப்பட்டு வந்தன. மேலும், உலகக் கோப்பைத் தொடரானது ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்படுவது வரலாற்றில் இது 2-வது முறை ஆகும். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையை ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தியிருந்தன. உலகக் கோப்பைத் தொடரானது அமெரிக்காவில் 11 நகரங்களிலும், மெக்சிகோவில் மூன்று நகரங்களிலும் மற்றும் கனடாவில் இரண்டு நகரங்களிலும் நடத்தப்படவுள்ளது. இதில் மெக்சிகோ நாடு ஒட்டுமொத்தமாக 13 போட்டிகளை நடத்தவுள்ளது. ஜூன் 11 அன்று மெக்சிகோ சிட்டியில் மெக்சிகோவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே நடைபெறும் பிரம்மாண்ட தொடக்க ஆட்டம் மற்றும் நாக்-அவுட் சுற்றின் மூன்று போட்டிகள் ஆகியவை இதில் அடங்கும்.
மெக்சிகோவைப் போலவே கனடாவும் ஒட்டுமொத்தமாக 13 போட்டிகளை நடத்தவுள்ளது. இதில் ஜூன் 12 அன்று டொராண்டோவில் கனடா - போஸ்னியா-ஹெர்சகோவினா இடையே நடைபெறும் முதல் ஆட்டமும், நாக்-அவுட் சுற்றின் மூன்று போட்டிகளும் அடங்கும். தொடரின் எஞ்சிய 78 போட்டிகளும் அமெரிக்காவில் நடத்தப்படவுள்ளன. ஜூன் 12 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அமெரிக்க அணி, பராகுவே அணியை எதிர்கொள்ளும் ஆட்டத்துடன் அங்கு போட்டிகள் தொடங்குகின்றன. மேலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டி உள்ளிட்ட அனைத்து முக்கிய நாக்-அவுட் போட்டிகளும் அமெரிக்காவிலேயே நடைபெறுகின்றன.
கால்பந்து திருவிழாவின் தொடக்க நாளான இன்று தொடரை இணைந்து நடத்தும் நாடான ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள மெக்சிகோ தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு அஸ்டெகா மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து 12-ம் தேதி காலை 7.30 மணிக்கு இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தென் கொரியா - செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா தனது முதல் ஆட்டத்தில் அல்ஜீரியாவுடன் வரும் 17-ம் தேதி கன்சாஸ் சிட்டியிலுள்ள ஆரோஹெட் மைதானத்தில் மோதவுள்ளது.