FIFA WC 2026: இந்திய வம்சாவளி வீரர்கள் நால்வரின் அறிமுகம்
2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி விளையாடவில்லை என்றாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாமுவேல் முத்துசாமி, நிஷான் வேலுப்பிள்ளை, தஹ்சின் முகமது ஜம்ஷித், சர்பிரீத் சிங் ஆகிய 4 இளம் வீரர்கள் வெவ்வேறு நாடுகளின் தேசிய அணிகளுக்காக களம் இறங்கி வரலாற்று சாதனை படைக்க உள்ளனர். இதற்கு முன்னர் 2006-ல் பிரான்ஸ் அணிக்காக விகாஷ் தொராசோ (ஆந்திர வம்சாவளி) விளையாடி இருந்தார். இதன் பின்னர் இவ்வளவு அதிகமான இந்திய வம்சாவளி வீரர்கள் உலகக் கோப்பையில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
சாமுவேல் முத்துசாமி (காங்கோ)
29 வயதான நடுகள வீரரான சாமுவேல் முத்துசாமி பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர். இவரது தாய் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர், தந்தை கரீபியன் தீவுகளில் ஒன்றான குவாதலூப்பைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளி ஆவார்.
நிஷான் வேலுப்பிள்ளை (ஆஸ்திரேலியா)
25 வயது விங்கரான நிஷான் வேலுப்பிள்ளை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பிறந்தவர். இவரது தாய் ஆங்கிலோ-இந்தியர், தந்தை மலேசியாவில் குடியேறிய இலங்கைத் தமிழ் வம்சாவளி ஆவார்.
தஹ்சின் முகமது ஜம்ஷித் (கத்தார்)
19 வயதான தஹ்சின் முகமது ஜம்ஷித்தின் பெற்றோர் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை தலச்சேரியை சேர்ந்தவர், தாய் வளப்பட்டணத்தைச் சேர்ந்தவர். இவர்கள் 2006-ல் கத்தாருக்குக் குடிபெயர்ந்தனர்.
சர்பிரீத் சிங் (நியூஸிலாந்து)
நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் பிறந்த 27 வயதா சர்பிரீத் சிங் அட்டாக்கிங் மிட்பீல்டர் ஆவார். இவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.