Select Location
All Locations
State
Region
City / District
இனி கோயில் கடைகளில் இது கட்டாயம்...மீறினால் அபராதம், உரிமம் ரத்து..

இனி கோயில் கடைகளில் இது கட்டாயம்...மீறினால் அபராதம், உரிமம் ரத்து..

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில்களில் செயல்படும் பிரசாதக் கடைகள் மீது நீண்ட காலமாக தரக்குறைவு, விலை உயர்வு உள்ளிட்ட புகார்கள் எழுந்து வந்த நிலையில், அமைச்சர் ரமேஷ் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இனி கோவில் வளாகத்திற்குள் தான் பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

இந்தத் திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தெளிவான கெடு விதித்துள்ளார். மேலும், வடை, முறுக்கு உள்ளிட்ட பிரசாதங்களின் அளவு, விலைப்பட்டியல், தயாரிப்பு தேதி, உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கண்காணிக்க தனி குழு ஒன்றை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் விற்கப்படும் பொருட்களின் விலைப்பட்டியல் வைக்க அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
தூய்மையான இறைவனுக்கு பூஜைக்கு பயன்படுத்தும் தரமான பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். 

அரசிடம் அனுமதி பெறாத எந்த பொருட்களையும் விற்க அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் சில முக்கிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

a) நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக பக்தர்களிடம் கண்டிப்பாக பணம் வசூலிக்கக் கூடாது.
b) தரமான பூஜை பொருட்கள், பூச்சரம், பூமாலைகள், தேங்காய், பழங்கள், வெற்றிலை பாக்கு. குங்குமம், விபூதி, ஊதுபத்தி, சாம்பிராணி, எண்ணெய், நெய் உள்ளிட்ட அனைத்து பூஜை பொருட்களும் தரமானதாகவும், இறைவனுக்கு சமர்ப்பிக்கத் தகுதியானதாகவும் இருக்க வேண்டும்.
c) கெட்டுப்போன அல்லது தரம் குறைந்த பொருட்களை பக்தர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது.

d) பக்தர்கள் கேட்காத பொருட்களை வாங்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. பக்தர்கள் பொருட்களின் தரம் குறைவாக உள்ளதாக தெரிவித்து மாற்றித் தர கேட்கும் பட்சத்தில் விற்பனையாளர்கள் சரியான பொருட்களை மாற்றி கொடுக்க வேண்டும்.

e) MRP குறிப்பிடப்பட்ட வர்த்தக நிறுவன தயாரிப்புகள் நிர்ணயிக்கப்பட்ட MRP க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது.
f) பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது திருக்கோயில்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பூஜைப் பொருட்களை தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் வைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.
g) மஞ்சள் துணிப்பைகள். மூங்கில் கூடைகள், வலிய காகிதப் பைகள் மட்டுமே திருக்கோயில் வளாகத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்.
h) திருக்கோயிலுக்கு செல்லும் / வெளியேறும் வழிகள் மற்றும் பூஜை பொருள் விற்பனை கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமிக்கக் கூடாது

i) திருக்கோயில் கடைகளுக்கு அருகில் உள்ள திருக்கோயில் சார்ந்த இடங்களை குப்பைகளின்றி தூய்மையாக பொருட்களை விற்பனை செய்பவர்கள் பராமரிக்க வேண்டும்.

j) திருக்கோயில்களில் சந்தை விலையைக் கருத்தில் கொண்டு ஆணையர் அனுமதி பெற்ற விலைப்பட்டியலின்படி வியாபாரிகள் பின்பற்றுவதை திருக்கோயில் நிர்வாகம் / அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
k) திருக்கோயில் நிர்வாகம் இது தொடர்பாக அவ்வப்போது கடையை ஆய்வு செய்யலாம்.

திருக்கோயில் நிர்வாகம் கேட்கும் விவரங்களை பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
விற்பனையாளர்களுக்கு அபராதம்
இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டால் திருக்கோயில் நிர்வாகம் பூஜை பொருட்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கலாம்.

உரிமம் ரத்து
அதிக விலை வசூலித்தல், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தல், விதிமுறைகளை கருத்தில் கொள்ளாமல் பக்தர்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் செயற்படும் பூஜை பொருள் விற்பனை கடைகளின் விற்பனை உரிமத்தை பரிசீலனை செய்து ரத்து செய்யலாம்.
இந்த சுற்றறிக்கையை அனைத்து மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர்கள், அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் திருக்கோயில் நிர்வாகிகளுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Hindu Tamil 2 hours ago
Home Flash News