மத்திய அரசின் தடைக்கு எதிர்ப்பு! டெலிகிராம் நிறுவனம் வழக்கு!
மத்திய அரசின் தடையை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் புதன்கிழமை வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் டெலிகிராம் செயலி வாயிலாக முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளது.
நீட் மறுதேர்வை எந்தவித முறைகேடுமின்றி சுமூகமாக நடத்தி முடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அந்தவகையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-ன் படி டெலிகிராம் செயலிக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்த டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பாவெல் டுரோவ், இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையானது, 15 கோடி பயனர்களுக்கான தண்டனை எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்திய அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்யக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
நீதிபதி தேஜஸ் காரியா அமர்வில் தாக்கல் செய்த மனுவில், அரசின் தடையால் 15 கோடி பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.