தெருவோர வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்தாத மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு
மதுரை: தமிழகத்தில் தெருவோர வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்தாத மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், உள்ளாட்சிகளின் செயல் அலுவலர்கள் மீது 6 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முப்பிடாதியம்மன் கோயில் தெரு மற்றும் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத நகராட்சி ஆணையர், காவல் ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி சித்தார்த்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார்.
கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் சந்நிதி தெருக்களில் வியாபாரம் செய்து வரும் தெருவோர வியாபாரிகளை அப்புறப்படுத்தத் தடை விதிக்கக்கோரியும் டி.சண்முகவேல் உள்பட 27 வியாபாரிகள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் பல நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தெருவோர வியாபாரிகள் சட்டம் மற்றும் 2015-ம் ஆண்டின் திட்ட நடைமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபார ஒழுங்குமுறை) சட்டம்- 2014, நகர அளவிலான வியாபாரக் குழுக்களை அமைப்பதற்கும், வியாபார மண்டலங்களை அடையாளம் காண்பதற்கும் வழிவகுக்கிறது. சட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் விதி 20-ன் படி, பணியில் உள்ள ஒவ்வொரு ஊழியரும் முழுமையான நேர்மையையும் கடமை உணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரிகள் தமக்கு ஒதுக்கப்பட்ட பணியை அதற்கென நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள்ளும், எதிர்பார்க்கப்படும் தரத்துடனும் நிறைவேற்ற வேண்டும். இதில் தவறும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தமிழகத்தில் பல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ‘தெருவோர வியாபாரிகள் சட்டம்’, அதற்கான விதிகள் மற்றும் 2015-ம் ஆண்டுத் திட்டம் ஆகியவற்றின்கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகளைச் செயல்படுத்தத் தவறிய நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் செயல் அலுவலர்கள் மீது 6 மாதத்தில் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் அதிகாரிகள் ஏற்கெனவே நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளால் எந்தவித ஆக்கிரமிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தைத்தவிர வேறு கட்டணம் வசூலிக்கக் கூடாது. கட்டணத்தை வசூலிக்க தனி நபர்களுக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.