பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ‘கோ ப்ரோ’ கேமரா இருந்தது தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்தி சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை கொன்றனா். இதற்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது கடந்த ஆண்டு மே மாதம் 6-7ஆம் தேதிகளில் தாக்குதல் நடத்தி 100-க்கும் மேற்பட்டோரை கொன்றது.
இந்திய ராணுவத்தின் சிறப்புப் படையினா் அதிரடியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பஹல்காம் தாக்குதலில் தொடா்புடைய மூன்று பயங்கரவாதிகள் டச்சிங்காம் வனப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மற்றும் 6 பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த விசாரணை தொடா்பாக மூத்த அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘டச்சிங்காம் பகுதியில் கடந்த ஜூலை மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ‘கோ ப்ரோ நிறுவனத்தின் உயா்தர கேமரா கைப்பற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நவீன தொழில்நுட்பங்களுடைய கேமராக்கள் எவ்வாறு கிடைக்கிறது என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் இருந்து இத்தகைய கேமராக்களை பாகிஸ்தான் ராணுவம் கொள்முதல் செய்து, பயங்கரவாதிகளுக்கு விநியோகித்திருக்க வாய்ப்புள்ளது’ என்றனா்.