Select Location
All Locations
State
Region
City / District
3ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான புத்தகங்களில் அம்பேத்கர் பற்றிய பாடங்களை சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

3ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான புத்தகங்களில் அம்பேத்கர் பற்றிய பாடங்களை சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த அமுதன், அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். இதை ராஜேஷ், விஜய் ஆகிய இருவரும் அவமதித்தாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேவகோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜேஷ், விஜய், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, இது வெறும் தனிநபர் மோதல் அல்ல. சமூகத்தின் நம்பிக்கை மீதான தாக்குதல். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களுக்கு அம்பேத்கரைப் பற்றி முறையான புரிதல் இல்லை. எனவே இருவரும் தலா 101 அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை வாங்க வேண்டும். அதில் ஒரு புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட்டு, மீதமுள்ள 100 புத்தகங்களை டி. கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும். இருவரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் தங்கள் தவறுக்கு வருத்தம் தெரிவித்தனர். அப்போது அம்பேத்கர் புத்தகத்தை உண்மையாகவே இருவரும் படித்தார்களா என்பதை சோதிக்க, நீதிபதி இருவரிடம் 30 கேள்விகளை கேட்டார்.

அதற்கு இருவரும் சரியான பதில்களை கூறியதால் அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து, இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாகச் சுருக்கிவிடக்கூடாது. அவர் ஒட்டுமொத்த தேசத்திற்கும் சொந்தமானவர். 3ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்புகள், அரசியல் சாசன உருவாக்கம் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் குறித்த பாடங்களைச் சேர்க்க வேண்டும். 2027-28ம் கல்வியாண்டு முதல் இந்த பாடத்திட்ட மாற்றங்களைச் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் மற்றும் பள்ளிக் கல்விதுறை செயலர் ஆகியோர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.


Dinakaran 48 minutes ago
Home Flash News