Select Location
All Locations
State
Region
City / District
வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

டெல்லி: வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிவாரண மதிப்பீடுகளை 21 மாநில அரசுகள் மற்றும் தேசிய தலைநகர் தில்லி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆந்திரப்பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் இதில் அடங்கும்.

வெப்ப அலைகளின் தீவிரம், காலஅளவு, அடிக்கடி உயர்ந்து வரும் அதன் தாக்கம், விளிம்பு நிலை மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினர், திறந்தவெளியில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்குமிட வசதியில்லாத வீடற்ற மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் ஆணையம் கண்டறிந்துள்ளது.

கடும் வெப்பம் காரணமாக மூத்த குடிமக்கள், சிறார்கள், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் ஆகியோருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. கூடுதலாக, வெப்ப அலைகளின் தாக்கம் காரணமாக வாழ்வாதார இழப்புகளுடன், தீ விபத்து போன்ற அபாயங்களும் அதிகரித்துள்ளது.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனைத்து மாநிலங்கள் மற்றும் தில்லி யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இக்கடிதத்தில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. 2019-23-ம் ஆண்டுகளுக்கு இடையே சன்ஸ்ட்ரோக் அல்லது கடும் வெப்பம் காரணமாக 3,712 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவித்துள்ளதை அந்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடும் வெப்பம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கும், இதனால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அல்லது ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையான செயல்பாட்டு முறையின்படி, நிவாரண நடவடிக்கைகளை எவ்வித இடையூறுமின்றி உடனடியாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்ட நிர்வாகத்திடமிருந்து வெப்ப அலைகளால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒட்டுமொத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் அந்த ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


Dinakaran 3 hours ago
Home Flash News