செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல் ஆணையரிடம் வருமான வரித்துறை புகார்
சென்னை: தவறான தகவல்களை வெளியிட்ட செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் வருமான வரித்துறை புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் தலைவரும் பெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளருமான செல்வப்பெருந்தகை கடந்த 20-ம் தேதி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று வருமான வரித்துறையின் கவனத்துக்கு வந்துள்ளது.
அதில், ‘வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை’ என்ற பெயரில், தன்னைத் தொகுதிக்குள் சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாகவும், தனது அரசியல் பணிகளைச் செய்வதற்கும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் தடையாக இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதே குற்றச்சாட்டுகளை அவர் அன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பின் போதும் மீண்டும் தெரிவித்திருந்தார். மேலும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செல்வப்பெருந்தகை இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டது.
குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையற்றவை. கடந்த 20-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு சமீபத்திய தேதிகளிலோ செல்வப்பெருந்தகைக்கு எதிராக வருமான வரித்துறையினரால் எந்தவிதமான சோதனையோ ஆய்வோ அல்லது அமலாக்க நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். மேலும், அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் உட்பட எந்தவொரு இடமும், வருமானவரித் துறையின் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. கணக்கில் வராத பணம் கொண்டு செல்லப்படுவதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூரின் சில பகுதிகளில் வருமானவரித் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட வரம்புக்குட்பட்ட சரிபார்ப்புப் பணிகள் முறையான அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டன.
இதற்கும் செல்வப்பெருந்தகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தச் சரிபார்ப்பு நடவடிக்கைகளில் மேல் நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. மேலும் இந்த நடவடிக்கை தனிப்பட்ட முறையில் எவரையும் பாதிக்கவில்லை. செல்வப்பெருந்தகை கூறியுள்ள தவறான மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்கள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தவறான தகவல்களைப் பரப்பியது மற்றும் அரசுத் துறை மீது அவதூறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.