“பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி
கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 182 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த அணியில் அணியின் இளம் பேட்ஸ்மேனான 21 வயதான முகுல் சவுத்ரியின் அதிரடி ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. ஒரு கட்டத்தில் லக்னோ அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியிருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவையாக இருந்தன. நெருக்கடியான அந்த நிலையில் முகுல் சவுத்ரி அதிரடியாக விளையாடி 27 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். வைபவ் அரோரா வீசிய 17-வது ஓவரில் முகுல் சவுத்ரி, தோனியை போன்று ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தினார். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகுல் சவுத்ரி ஜெய்ப்பூரில் உள்ள ஆரவல்லி பயிற்சி மையத்தில் ஆரம்பத்தில் ஒரு மிதவேகப் பந்துவீச்சாளராகவே தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் விக்கெட் கீப்பராக இருப்பதற்கு வேறு வீரர் இல்லாததால் விக்கெட் கீப்பராக மாறியுள்ளார். இதன் பின்னர் பயிற்சியாளர்கள் அவரது இயல்பான அதிரடி ஆட்டத் திறமையைக் கண்டறிந்து, பேட்டிங் பக்கம் திசைதிருப்பினர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில், டெல்லி அணிக்கு எதிரான கடைசி ஓவரில் முகுல் சவுத்ரியின் அணிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டன. சாத்தியமே இல்லை என்று தோன்றிய அந்த இலக்கை மிக நெருக்கமாகக் கொண்டு வந்த முகுல் சவுத்ரி, கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலைக்கு ஆட்டத்தை மாற்றினார்.
அந்த அற்புதமான இன்னிங்ஸ்தான் அவரை ஐபிஎல் அணிகளின் பார்வையில் பட வைத்தது. அந்த சிறப்பான ஆட்டத்துக்குப் பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முகுல் சவுத்ரியை ரூ.2.60 கோடி ஏலத்தில் எடுத்தது. அதில் இருந்து 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது அதைவிடப் பெரியதாக ஐபிஎல் மேடையில் ஒரு சூழல் முகுல் சவுத்ரிக்கு கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அமைந்தது.