Select Location
All Locations
State
Region
City / District
#திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பங்குனி உத்திரம் - திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர்: இந்துக்கள் ஒவ்வொருவரும் பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் அன்று தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு குலதெய்வத்தை வழிபாடு செய்வதின் மூலம் தங்கள் குலம் செழிக்கும், திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் நமது முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அவ்வாறு குலதெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு செல்வார்கள். ஏராளமானோர் முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு அவரவர் குலதெய்வ கோவிலுக்கு செல்வார்கள்.

அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 6.30 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளியம்மன் தபசுக்கு எழுந்தருளினார்.

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4.30 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதித்தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவ கொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வருகிறார்.

தொடர்ந்து சுவாமியும், அம்மனும் கீழ ரதவீதி, பந்தல் மண்டபம் முகப்பிற்கு வந்து, அங்கு வைத்து சுவாமிக்கும், வள்ளியம்மனுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்மனும் வீதி உலா வந்து கோவில் சேர்கின்றனர். இரவு 10 மணிக்கு மேல் கோவில் வளாகத்தில் உள்ள 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு சுவாமிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறாது.


Malaimalar 1 month ago
Home Flash News