``மக்களின் தேவைகளையும், உரிமைகளையும் விவாதிக்க வேண்டிய சட்டமன்றம் இன்றைக்கு..." - சீமான் ஆவேசம்
இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. தவெக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இம்மானுவேல் சேகரனாருக்கு மரியாதை செலுத்தினர்.
அதன் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``இலங்கை ஈழத்திலிருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்கு முறையான குடியுரிமையோ, உரிமைகளோ மறுக்கப்பட்டு வரும் அவலநிலை தொடர்ந்து நீடிக்கிறது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஐரோப்பிய நாடுகள் போன்றவை தமிழர்களைத் தங்கள் சொந்த நாட்டு மக்களாக ஏற்றுக்கொண்டு குடியுரிமை, ராணுவம், காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறைகளில் முன்னுரிமை அளிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் திறமை பெற்றிருந்தாலும் உயர்கல்வி பெற முடியாமலும், 'அகதி' என்ற சொல்லாலேயே முடக்கப்பட்டு சொந்த நிலத்திலேயே அனாதைகளாக வாழும் சூழல் நிலவுகிறது. தமிழர்களின் உயிர்களுக்கும், உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படாமல், வெறும் வாக்காளர்களாக மட்டுமே பார்க்கப்படும் அரசியல் சூழலே இத்தகைய துன்பத்திற்குக் காரணம்.