Select Location
All Locations
State
Region
City / District
மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு: பாசனத்திற்கு கூடுதல் நீர் திறப்பால் மின் உற்பத்தி உயர்வு!

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு: பாசனத்திற்கு கூடுதல் நீர் திறப்பால் மின் உற்பத்தி உயர்வு!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 8 மணி நிலவரப்படி 8558 கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து சரிந்ததன் காரணமாக, அணையின் நீர்மட்டமும் 92.08 அடியாகச் சரிந்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளுக்காக அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும் போது அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து இந்த மின் நிலையங்களில் மின் உற்பத்தி நடைபெறும்.

கடந்த மாதம் 1-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நீர்மின் நிலையங்களில் 70 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. நேற்று 7-ந் தேதி இந்த நீர்மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடி 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதன் காரணமாக நீர்மின் நிலையங்களில் மின்உற்பத்தி 110 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்குமானால் இந்த மின் நிலையங்களில் நடைபெற்று வரும் மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகப் பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


Dinakaran 2 hours ago
Home Flash News