Select Location
All Locations
State
Region
City / District
உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவை தேர்தல்;

உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவை தேர்தல்; பாஜகவை வீழ்த்த சமாஜ்வாதி முதல்வர் வேட்பாளர் டிம்பிள்?; பெண் வாக்காளர்களை கவர அகிலேஷ் புதிய வியூகம்

லக்னோ: உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பெண் வாக்காளர்களை கவரும் நோக்கில் அகிலேஷ் யாதவின் மனைவியும், எம்பியுமான டிம்பிள் யாதவை முன்னிறுத்தி சமாஜ்வாதி கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது. வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது மனைவி டிம்பிள் யாதவ் இனி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு அறிவித்திருந்தார். எனினும், தந்தை முலாயம் சிங் யாதவின் மறைவுக்குப் பிறகு 2022ம் ஆண்டு மெயின்புரி தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கிய டிம்பிள் யாதவ் 2.88 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், தொடர்ந்து 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 2.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றார்.

கடந்த 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் உத்தரபிரதேசத்தின் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களை கைப்பற்றியதுடன், அக்கட்சியின் சார்பில் 5 பெண் எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், ஆளும் பாஜக சார்பில் நடிகை ஹேமாமாலினி மட்டுமே பெண் எம்பியாக வெற்றி பெற்றார். இந்த சூழலில், அம்மாநிலத்தில் வருகிற 2027ம் ஆண்டு மே 22ம் தேதியுடன் சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்த டிம்பிள் யாதவை முதன்மை பிரசார முகமாகவும் முதல்வர் வேட்பாளராக அகிலேஷ் முன்னிறுத்தி வருகிறார்.

சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய நாடாளுமன்ற நோக்கிய பேரட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியதில் காயமடைந்த மாணவர்களுக்கு டிம்பிள் யாதவ் நேரில் சென்று ஆறுதல் கூறி களத்தில் நின்றார். தொடர்ந்து லக்னோவில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில், சமாஜ்வாதி ஆட்சி அமைந்தால் தகுதியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்த டிம்பிள், ‘வெறும் பேச்சால் மட்டும் பெண்கள் சக்தி வளர்ந்துவிடாது; அவர்களுக்கு உண்மையான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்; பாதி மக்கள் தொகையாக உள்ள பெண்களின் முன்னேற்றமே எங்கள் இலக்கு’ என்று பேசினார்.


Dinakaran 1 hour ago
Home Flash News