Select Location
All Locations
State
Region
City / District
நேபாள நீர்மின் திட்டங்களில் 933 பேர் சிக்கியிருக்க வாய்ப்பு: பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்

நேபாள நீர்மின் திட்டங்களில் 933 பேர் சிக்கியிருக்க வாய்ப்பு: பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்

காத்மாண்டு: நேபாள நீர்மின் திட்டங்களில் 900-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 26-ம் தேதி இமயமலை​யில் பனிமலைகள் உடைந்து நேபாள நதி​களில் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது. இதன் காரண​மாக அந்த நாட்​டின் ரசு​வா, தாதிங், நுவாகோட், கோர்க்​கா, டானாஹன், நவல்​பூர், பராசி, சிட்​வான் ஆகிய 8 மாவட்​டங்​கள் மிக கடுமையாகப் பாதிக்​கப்​பட்டன. 

வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 797 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேபாளத்தின் 6 நீர்மின் திட்டங்களில் 933 தொழிலாளர்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி அவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கு முன்பே குழிகளில் அடக்கம் செய்யும் நடவடிக்கைகளை சித்வான் மாவட்ட அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இது மத சடங்குகள் மற்றும் மரபுகளை புறக்கணிப்பதாகஅவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுச் செயலாளர் அம்ரித் பகதூர் ராய், “மீட்கப்பட்ட சடலங்களை வைக்க ஃபிரீசர்களும் (freezer) டிஎன்ஏ பரிசோதனைக் கருவிகளும் அவசரமாக தேவைப்படுகின்றன. உடல்கள் சிதைவதைத் தடுக்கவும், பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யவும் உடல்களை விரைவாக பாதுகாத்து அடையாளம் காண வேண்டும். 

நிறைய சவால்களுக்கு மத்தியில், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் நேபாளம் தனது முழு திறனையும் பயன்படுத்தி வருகிறது” என்று தெரிவித்துள்ளார். நேபாளம் கற்பனை செய்ய முடியாத பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்துள்ளார். “போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம், இழந்த உயிர்களையும் சொத்துக்களையும் உள்கட்டமைப்புகளையும் முழுமையாக கணக்கிடுவதை மிகவும் கடினமாக்கியுள்ளது. மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு, தொடர்ச்சியான அபாயங்கள் காரணமாக இந்த பணி சவாலாக இருந்தாலும் குடிமக்களின் உயிர்களைப் பாதுகாக்க நாங்கள் உறதியுடன் முன்னேறி வருகிறோம்.” என்று பிரதமர் பலேந்திர ஷா குறிப்பிட்டுள்ளார்.


Hindu Tamil 47 minutes ago
Home Flash News