தயாராகிறது ராமர் கோயில் ஆவணப் படம்: பிரதமர் மோடியின் பேட்டி, 500 வருட போராட்டம் இடம்பெறுகிறது
புதுடெல்லி: ராமர் கோயிலுக்கான 500 ஆண்டுகாலப் போராட்டம் மற்றும் அதன் பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளை விவரிக்கும் ஆவணப்படம் தயாராகி வருகிறது. இதை புனேவைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் இத்திரைப்படம் நிறைவடைந்திருக்க வேண்டும். இருப்பினும், கோயில் அறக்கட்டளையின் இடைக்காலப் பொதுச் செயலாளர் கிருஷ்ணா மோகன், செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறவுள்ள அறக்கட்டளைக் கூட்டம் வரை இப்பணியை நிறுத்தி வைக்குமாறு நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு ராமர் கோயிலின் காணிக்கை திருட்டு புகார் காரணம் எனக் கருதப்படுகிறது.
7 அத்தியாயங்களைக் கொண்ட இந்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏக்நாத் சட்புர்கர், எந்தவித ஊதியமும் இன்றி இப்படத்தை உருவாக்கி வருகிறார். அவரும், அவரது மனைவி ஸ்வப்னா சட்புர்கரும் அடங்கிய 35 பேர் கொண்ட குழுவினர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக இத்திரைப்படத்துக்காகப் பணியாற்றி வருகின்றனர். தற்போது, நினைவுத் தூண் அமைப்பது தொடர்பான காட்சிகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் நேர்காணல் ஆகியவை மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளன. கோயில் இயக்கம் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட சுமார் 170 பேரிடம் இதற்காக நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. அயோத்தி மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த, கோயில் இயக்கத்துடன் தொடர்புடைய முக்கியப் பிரமுகர்களின் நேர்காணல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதில் சாதுக்கள், மடாதிபதிகள், கரசேவையில் ஈடுபட்டவர்கள், ராமர் கோயிலுக்கான இயக்கத்தைப் பற்றி செய்தி வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆகியோர் அடங்குவர். அத்வானி, ஜோஷி நேர்காணல் மேலும், முன்னாள் மத்திய அமைச்சர்களான லால் கிருஷ்ணா அத்வானி, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி, சாத்வி ரிதம்பரா மற்றும் வினய் கட்டியார் ஆகியோரின் நேர்காணல்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.