ஹாக்கி உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 8-வது இடம்
வாவ்ரே: உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் நேற்று முன்தினம் இந்திய அணி, பெல்ஜியத்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி கடைசி நிமிடம் வரை 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. போட்டி முடிவடைய 26 விநாடிகளே எஞ்சியிருந்த நிலையில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்ற ஆட்டம் 3-3 என சமனில் முடிவடைந்தது. முன்னதாக 6-வது நிமிடத்தில் அபிஷேக்கும், 60-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங்கும் ஃபீல்டு கோல் அடித்து இருந்தனர்.
பெல்ஜியம் அணி தரப்பில் டுவெகோட் (22-வது நிமிடம்), லாபூஷெரே (23-வது நிமிடம்), டி ஸ்லூவர் (47-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து 8-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்தது. பெனால்டி ஷூட்அவுட்டில் இந்திய அணி தரப்பில் ஷில்லானந்த் லக்ரா, தில்பிரீத் சிங், அபிஷேக் ஆகியோர் கோல் அடித்தனர். அதேவேளையில் ஹர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங் ஆகியோர் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். பெல்ஜியம் அணி தரப்பில் டாம் பூன், ஆர்தர் டி ஸ்லூவர், அலெக்சாண்டர் ஹென்ட்ரிக்ஸ், ரோமன் டுவேகோட் ஆகியோர் கோல் அடித்தனர். விக்டர் ஃபோர்பெர்ட் இலக்கைத் தவறவிட்டார்.