Select Location
All Locations
State
Region
City / District
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பகவதி சேவை, கலச வழிபாடு கோலாகலம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பகவதி சேவை, கலச வழிபாடு கோலாகலம்!

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர வழிபாட்டின் ஒரு பகுதியாக பகவதி சேவை மற்றும் கலச வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. மாதாந்திர வழிபாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (ஆக.21) இரவு நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் (சிங்கம்) ஆவணி மாத வழிபாட்டுக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 17-ம் தேதி முதல் தொடர் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோயில் வளாகத்தில் உள்ள மாளிகாபுரத்தம்மன் கோயிலில் பகவதி சேவை எனும் பாரம்பரிய வழிபாடு சடங்கு நடைபெற்றது.

மேல்சாந்தி மனுநம்பூதிரி தலைமையிலான குழுவினர் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் பெரிய அகல்விளக்கை அம்மனாக பாவித்து மலர்களால் அலங்கரித்து மந்திரங்கள் ஓதி தீபாராதனை வழிபாடாக நடைபெற்றது. இதே போல் சபரிமலை சந்நிதானத்தில் தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் சஹஸ்ர கலச பூஜை நடந்தது. இதற்காக தங்கம், வெள்ளி மற்றும் செப்பு கலசங்கள் ஆயிரத்து ஒன்று எண்ணிக்கையில் வைக்கப்பட்டு திரவியம், நவரத்தினம், நறுமண பொருட்கள், ஏழு கடல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தீர்த்தம் ஆகியவை நிரப்பப்பட்டன. தொடர்ந்து பிரதானமாக உள்ள பிரம கலசம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர் வழிபாடுகளுக்குப் பிறகு இன்று (ஆக.21) இரவு கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. பின்பு ஓணம் வழிபாட்டுக்காக வரும் ஆக.24-ம் தேதி நடை மீண்டும் திறக்கப்பட்டு பின் ஆக.28-ம் தேதி வரை வழிபாடுகள் நடைபெறும்.


Hindu Tamil 9 days ago
Home Flash News