தமிழகத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் புதுச்சேரியில் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் தொடக்கம்
புதுச்சேரி: இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு மண்டலம் சென்னை தலைமையகம் சார்பில் புதுச்சேரி அரசின் ஒத்துழைப்புடன் அக்னிவீர் அனைத்து பிரிவு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று அதிகாலை தொடங்கியது.
ராணுவ தேர்வு பணியில் 120 ராணுவ அதிகாரிகள், வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
முதலில் 1.6 கி.மீ. ஓட்டம் நடந்தது. இதில் தகுதி பெறுபவர்களுக்கு 10 புல் அப், 9 அடி பள்ளம் தோண்டுதல், சமநிலை ஓட்டம், உடல் அளவீடு தேர்வு நடந்தது. இவை அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ராணுவ மருத்துவ குழுவால் உடல் நலம், கண்பார்வை சோதனை செய்யப்படும். வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த ராணுவ முகாமில் நாள்தோறும் 1,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று சுமார் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.