Select Location
All Locations
State
Region
City / District
ராகுல் நாளை சென்னை வருகை! முதல்வர் விஜய்யை சந்திக்கிறாரா?

ராகுல் நாளை சென்னை வருகை! முதல்வர் விஜய்யை சந்திக்கிறாரா?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பயிற்சி முகாமில் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

இதற்காக, தில்லியில் இருந்து நாளை காலை விமானம் மூலம் சென்னைக்கு வரும் ராகுல் காந்தி, இங்கிருந்து கார் மூலம் மாமல்லபுரம் செல்லவுள்ளார். இந்த பயணத்தின் போது தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் முதல்வரை சந்திக்க வாய்ப்புள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக வருகிறார் எனத் தெரிவித்தார்.

எனவே, முதல்வர் விஜய்யும் ராகுல் காந்தியும் நாளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது. முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி அழைக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தில்லி சென்ற முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்திருந்தார். முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் இரண்டு பேர் அமைச்சர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Dinamani 2 hours ago
Home Flash News