Select Location
All Locations
State
Region
City / District
ஆல்கஹால் கலந்த மருந்துகளுக்கு கட்டுப்பாடு: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

ஆல்கஹால் கலந்த மருந்துகளுக்கு கட்டுப்பாடு: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: ஆல்கஹால் கலப்புள்ள இருமல் சிரப் உள்ளிட்ட மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: புதிய விதிகளின்படி 12%-க்கும் அதிகமான ஆல்கஹால் கலந்து, 30 மிலி-க்கும் அதிக அளவுள்ள பாட்டில்களில் விற்கப்படும் மருந்துகள் அனைத்தும் ‘அட்டவணை எச்-1’ பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, இவற்றை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் நேரடியாக மருந்தகங்களில் வாங்க முடியாது. அதிக ஆல்கஹால் கலப்புள்ள சில இருமல் மருந்துகள், டானிக்குகள், பிற வாய்வழியாக உட்கொள்ளப்படும் மருந்துத் தயாரிப்புகளை போதுமான மேற்பார்வையின்றி மருந்துச்சீட்டு இல்லாமல் விற்கப்படும்போது அதைத் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதைத் தடுக்கவே இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த வகை மருந்துகளை அட்டவணை எச்-1-க்கு மாற்றுவதன் மூலம், தவறான பயன்பாட்டைக் குறைக்கவும், பொறுப்பான விநியோகத்தை உறுதி செய்யவும், மருந்துக் கண்காணிப்பை வலுப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. நோயாளிகளைப் பொறுத்தவரை, இந்த மாற்றம் என்பது இந்த மருந்துகள் பாதுகாப்பற்றவை அல்லது தடைசெய்யப்பட்டவை என்று அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மருந்துகள் (5-வது திருத்த) விதிகள், 2026 சட்டம் மூலமாக இந்த வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, வீட்டு உபயோக சாதாரண மருத்துவ பொருட்களின் வரிசையில் இடம் பெற்றிருந்த ‘சிரப்ஸ்’ என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம், இதுவரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி விற்கப்பட்டு வந்த திரவ மருந்துகள் (டானிக், இருமல் மருந்து) அனைத்தும், தற்போது கடுமையான மருந்து ஒழுங்குமுறை பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (டிடிஏபி) உடன் கலந்தாலோசித்து, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940-ன் பிரிவுகள் 12 மற்றும் 33-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்த இறுதி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Hindu Tamil 15 days ago
Home Flash News