Select Location
All Locations
State
Region
City / District
காமராஜர் நினைவகத்தில் மறுசீரமைப்பு பணியை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம்: அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

காமராஜர் நினைவகத்தில் மறுசீரமைப்பு பணியை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம்: அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை: சென்னை தியாகராயநகரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவகத்தில் தற்போதைய அரசு சார்பில், மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிக மெதுவாக நடைபெறுவதாலும், நினைவகம் பூட்டிக் கிடப்பதாலும் இங்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், நிருபர்களிடம் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது: காமராஜர் நினைவகத்தை பாரம்பரிய முறைப்படி பராமரிக்க நாங்கள் ரூ.2.60 கோடி நிதி ஒதுக்கினோம். தேர்தலுக்கு முன்புவரை பணி விரைவாக நடைபெற்று வந்தன. தேர்தல் காரணமாக பணிகள் தடைபட்டன. தற்போது தவெக ஆட்சியில் பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை. ஜூலை 15ம்தேதி காமராஜரின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அன்று தமிழ்நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் நினைவகத்திற்கு வருவார்கள்.

அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பார்வைக்கு காமராஜர் நினைவகத்தை திறக்க வேண்டும். ஒரு வாரத்தில் பராமரிப்பு பணிகளை முடிக்கவில்லை என்றால், காமராஜர் அனுதாபிகளை ஒன்றிணைத்து தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு கூறியுள்ளார்.


Dinakaran 2 hours ago
Home Flash News