பண்ட், ஸ்டார்க், வெங்கடேஷ் அய்யர் - ஐபிஎல் வரலாறு காணாத சம்பளக் குறைப்பு!
ஐபிஎல் ஏலங்களில் பெரிய சம்பளம் என்று வாய்பிளந்த வீரர்கள் சிலருக்கு பெரிய அளவில் சம்பளக் குறைப்பு நிகழ்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பவர் ரிஷப் பண்ட். ஐபிஎல் 2025 தொடருக்காக ரூ.27 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரிஷப் பண்ட் இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ. 15 கோடியாகக் குறைக்கப்பட்ட சம்பளத்தில் சென்றுள்ளார்.
அதே போல் சம்பளக் குறைப்பு கண்ட வீரர்கள் பட்டியல் இதோ:
1.வெங்கடேஷ் அய்யர்:
2025 ஐபிஎல் ஏலத்தில் ரூ.23.75 கோடிக்கு கேகேஆர் அணியால் தக்கவைக்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர் 2026 சீசனுக்கு முன்னதாக வெறும் ரூ.7 கோடிக்கு ஆர்சிபி அணியில் சேர்ந்தார். 2025 ஏலத்தின்போது வெங்கடேஷ் ஐயரை வாங்குவதற்காக கடும் ஏலப்போட்டியில் இறங்கியுஜ் அவரை கைப்பற்ற முடியாமல் போன ஆர்சிபி ஓர் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த தொகையில் அவரை அணிக்குள் கொண்டு வந்தது. ஆரம்பத்தில் மாற்று பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர், சீசனின் முக்கியமான கட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். முக்கிய வீரர்களான ஃபில் சால்ட் மற்றும் ஜேக்கப் பெத்தெல் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அவர், ஆறு இன்னிங்ஸ்களில் 209 ரன்கள் குவித்து, 186.60 என்ற அதிரடி ஸ்டிரைக் ரேட்டை பதிவு செய்தார். இதன் மூலம், வெங்கடேஷ் ஐயர் தனது ஐபிஎல் வாழ்க்கையில் சாம்பியன் பட்டத்தை வென்ற இரண்டு வெவ்வேறு அணிகளில் ஆடிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் 2024-ல் கேகேஆர் அணி, 2026-ல் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்ற போது இவ்வணிகளில் ஆடினார்.
2. ரூ.18.5 கோடியிலிருந்து ரூ.2.5 கோடிக்கு வீழ்ந்த சாம் கரன்
2024 ஐபிஎல் தொடரில் ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியினால் எலம் எடுக்கப்பட்ட சாம் கரன், 2025-ல் சிஎஸ்கே அணியில் ரூ.2.5 கோடி சம்பளத்தில் இணைந்தார். 5 போட்டிகளில்தான் ஆட முடிந்தது. இது ஒரு மோசமான மாற்றமாக சாம் கரனுக்கு அமைந்தது.
3.ரூ.15 கோடியிலிருந்து வெறும் 1 கோடிக்கு சரிந்த கைலி ஜேமிசன்:
நியூஸிலாந்து ஸ்டார் ஆல்ரவுண்டர் இவர் ஐபிஎல் 2021-ல் பெரிய எதிர்பார்ப்புடன் ஆர்சிபி அணியினால் ரூ. 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் போன பிறகே உயரமான ஆல்ரவுண்ட தேவை என்று கைலி ஜேமிசனை அணியில் எடுத்தனர். சீசன் சரிவர அமையவில்லை, கோவிட் -19 தாக்கம் இவற்றால் இவரால் 2022 ஐபிஎல் தொடரில் ஆட முடியவில்லை இதனையடுத்து ஆர்சிபி இவரை ரூ.1 கோடி சம்பளத்தில் சிஎஸ்கேவுக்கு விடுவித்தது.
4. சம்பளம் பாதியாகக் குறைந்த மிட்செல் ஸ்டார்க்:
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சத் தொகையில் ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்று மிட்செல் ஸ்டார்க் கேகேஆர் அணியினால் 2024ம் ஆண்டு ரூ.24.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிளே ஆஃப் சுற்றில் அருமையாக வீசினார். ஆனாலும் அணிகளின் நிதி ‘நெருக்கடி’(!) காரணமாக அவர் மீண்டும் ஏலத்திற்கு வர நேரிட்டது அப்போது 2025-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியினால் ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
5. ரூ.15 கோடியிலிருந்து ரூ. 1 கோடிக்குச் சரிந்த ஜை ரிச்சர்ட்ஸன்:
பீபிஎல் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக இவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2021 ஏலத்தில் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால், கோவிட் தொற்று பரவலால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், அவர் வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. செப்டம்பரில் மீண்டும் தொடங்கிய ஐபிஎல்லின் இரண்டாம் பாதியில் ஜை ரிச்சர்ட்சன் பங்கேற்கவில்லை. இதன் பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அவரை விடுவித்ததால், அடுத்த ஆண்டு நடந்த ஏலத்தில் அவர் எந்த அணியாலும் வாங்கப்படாமல் போனார். பின்னர் 2023 ஆம் ஆண்டு, அடிப்படை விலைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும், தொடை பின்புற தசை (ஹாம்ஸ்ட்ரிங்) காயம் மீண்டும் ஏற்பட்டதால், அந்த சீசனையும் முழுமையாக தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.