Select Location
All Locations
State
Region
City / District
நீட் மறுதேர்வு! மாணவர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை!

நீட் மறுதேர்வு! மாணவர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை!

நீட் மறுதேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டது. நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிவுரைகளில் தெரிவித்திருப்பதாவது: ”தேர்வு எழுதவிருக்கும் ஒவ்வொரு மாணவரும் கடினமாக உழைத்து, நன்கு தயாராகியுள்ளீர்கள். தற்போது உங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை வைப்பதற்கான நேரம். அமைதியாக இருங்கள், போதுமான ஓய்வெடுங்கள். சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். இதைத்தான் நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். தேர்வு ஒத்திவைப்பு குறித்த வதந்திகளையோ அல்லது சமூக ஊடகங்களில் பரவும் தேவையற்ற தகவல்களையோ நம்பி குழப்பமடைய வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புங்கள்.

பாதுகாப்பான மற்றும் நேர்மையான முறையில் தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்ய, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். இத்தேர்வு நடைமுறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதே எங்கள் முதன்மையான முன்னுரிமையாகும். இதற்காக வலுவான, பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மே 3, தேர்வை ரத்து செய்த கடினமான முடிவு, முழுக்க முழுக்க உங்கள் நலனைக் கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டது. தவறு கண்டறியப்பட்டவுடன், இத்தேர்வு நடைமுறையின் நேர்மை காக்கப்படுவதை உறுதி செய்தோம். அந்த அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, இந்த முறை தேர்வு முறையை மேலும் வலுப்படுத்தியுள்ளோம்.

தேர்வு குறித்த மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனநல உதவிக்கான உதவி எண் (14416) செயல்பாட்டில் உள்ளது. உதவி தேவைப்படும் எவருக்கும் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளோம். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்: மாணவர்கள் அமைதியாக இருக்க உதவுங்கள். சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். அவர்கள் நிலையான மற்றும் அமைதியான மனநிலையுடன் தேர்வு எழுதச் செல்லட்டும். மாணவர்களே, உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்கள் சிறந்த திறனை வெளிப்படுத்துங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Dinamani 3 hours ago
Home Flash News