தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை : கரப்பான்பூச்சி ஜனதா கட்சி
அடிப்படை உரிமைகளைக் கோருவதற்காக தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே பதில் அளித்துள்ளார். நாட்டின் நீட் தேர்வு மோசடி, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குளறுபடி போன்றவற்றிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் தில்லி தொடங்கி, மகாராஷ்டிரம், கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களில் மத்திய அமைச்சருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு அதிகரித்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவிடம், தேர்தலில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போட்டியிடுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அபிஜீத் தீப்கே, நாங்கள் ஏன் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படை உரிமைக்காக தேர்தலில் போட்டியிட்டால் எப்படி? அது நடைமுறைக்கு சரிவராது. அடிப்படை உரிமைகளை கோருவதற்காக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியமில்லை எனக் குறிப்பிட்டார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.