Select Location
All Locations
State
Region
City / District
கொச்சி வந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பலில் வெடிக்காத ஏவுகணையை அகற்றிய இந்திய கடற்படை

கொச்சி வந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பலில் வெடிக்காத ஏவுகணையை அகற்றிய இந்திய கடற்படை

கொச்சி: கொச்சிக்கு வந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பலில் வெடிக்காத ஏவுகணையை கடற்படை வீரர்கள் பாதுகாப்பாக அகற்றினர். மார்ஷல் தீவுகள் நாட்டை சேர்ந்த எம்டி ஒலிம்பிக்லைப் என்ற எண்ணெய் கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு கேரளாவின் கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டது. அமெரிக்கா, ஈரான் போர் காரணமாக மே 26-ம் தேதி இந்த கப்பல் ஓமன் வளைகுடா பகுதியை கடக்கும்போது ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் எண்ணெய் கப்பலில் லேசான சேதம் ஏற்பட்டது. ஒரு ஏவுகணை வெடிக்காமல் கப்பலின் எண்ணெய் சேமிப்பு பகுதியில் கிடந்தது. எனினும் அந்த எண்ணெய் கப்பல் சில நாட்களுக்கு முன்பு கொச்சி கடல் பகுதிக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து கொச்சி தெற்கு கடற்படையை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் எம்டி ஒலிம்பிக் லைப் கப்பலுக்கு விரைந்து சென்றனர். அவர் கள் மிகுந்த கவனத்துடன் வெடிக்காத ஏவுகணையை பகுதி, பகுதியாக பிரித்து பாதுகாப்பாக அகற்றினர். இந்த கப்பல் வெளிநாட்டைச் சேர்ந்தது. இதில் இந்தியர்கள் யாரும் பணியாற்றவில்லை. எனினும் மனிதாபிமான அடிப்படையில் இந்திய கடற்படை மீட்புப் பணியை மேற்கொண்டு உள்ளது. இந்திய கடற்படை வீரர்களுக்கு எம்டி ஒலிம்பிக் லைப் மாலுமிகள், ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Hindu Tamil 2 hours ago
Home Flash News