முதல் ஒருநாள் போட்டி: இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது. இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் (ஜூன் 13, 17 மற்றும் 20) தொடங்குகிறது.
இந்நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது. காயம் காரணமாக இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆடவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான அணியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துப்படுவதால் இஷான் கிஷன், ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோருக்கு இந்த தொடர் முக்கியமானதாகும்.
கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோர் பேட்டிங்கில் மிரட்ட காத்திருக்கிறார்கள். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரின்ஸ் யாதல் அறிமுக வீரராக களம் காண வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தான் அணி டெஸ்டில் சோடை போனாலும் ஒருநாள் போட்டியில் ஓரளவு நன்றாக உள்ளது. இப்ராகிம் ஜட்ரான், ரமனுல்லா குர்பாஸ், செடிகுல்லா, ஓமர்சாய், கழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் அசத்தக் கூடியவர்கள். அதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3-ல் இந்தியா வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டம் சமனில் முடிந்தது. இவ்விரு அணிகள் இடையே நேரடி ஒருநாள் தொடர் நடப்பது இதுவே முதல் முறை ஆகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
இந்தியா:
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ் அல்லது குர்னூர் பிரார் ஆப்கானிஸ்தான்: இப்ராகிம் ஜட்ரன், ரமனுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய், இக்ரம் அலிகில், ரஷித் கான், முகமது சலீம், கசன்பார், ஜியாவுர் ரகுமான்.