‘ஓன் கோல்’ அடித்து பின்னடைந்த பராகுவே - அமெரிக்க அணிக்கு பெரிய வெற்றி | FIFA WC 2026
லாஸ் ஏஞ்சல்ஸின் சோஃபி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஃபிபா 2026 கால்பந்து உலகக்கோப்பையின் பிரிவு டி ஆட்டத்தில் யு.எஸ்.ஏ அணி பராகுவே அணியை 4-1 என்ற கோல்கள் கணக்கில் அடித்து நொறுக்கியது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் பராகுவே பெனால்டி பகுதிக்குள் பந்தைக் கொண்டு வந்து நெருக்கடி கொடுத்தது அமெரிக்க அணி. அந்த நெருக்கடியைச் சமாளிக்கும் எத்தனத்தில் பராகுவே வீரர் டேமியன் போபடில்லா பந்தை கோல்கீப்பருக்கு அடிக்கிறேன் பேர் வழி என்று தன் கோலுக்குள்ளேயே தள்ளி விட அமெரிக்க அணி 1-0 என்று முன்னிலை பெற்றது. அதன் பிறகு 31 மற்றும் 45வது நிமிடங்களில் அமெரிக்க அணி ஃபோலாரின் பாலோகன் 2 கோல்களை அடித்தார். ஆட்டம் முடியும் தறுவாயில் அதாவது 90 நிமிடங்கள் சென்று இஞ்ஜூரி நேரத்தில் கியோவானி ரெய்னா 4வது கோலை அடிக்க, 73வது நிமிடத்தில் பராகுவே வீரர் மாவ்ரிஷியோ ஒரு கோலை அடித்தார். பராகுவே வீரர்களை நிறுத்திய விதமும் தடுப்பு உத்திகளில் கோட்டை விட்டதும் தோல்விக்குப் பெரும் காரணமாயின. முதல் கோலை அமெரிக்காவுக்காக போட்டுத் தந்தவுடனேயே தடுப்பு உத்தியுடன் கூடிய அட்டாக்கிங் ஆட்டத்தை பராகுவே செலுத்தத் தவறியது.
போட்டி தொடங்கிய ஏழாவது நிமிடத்திலேயே அமெரிக்கா முன்னிலை பெற்றது. அமெரிக்க வீரர் வெஸ்டன் மெக்கென்னி வழங்கிய கட்-பேக் பந்தை தடுக்க முயன்ற பாராகுவே நடுகள வீரர் டேமியன் போபடில்லா தவறுதலாக தனது சொந்த வலையில் பந்தை செலுத்தினார். இதன் மூலம் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது. ஆரம்ப கோலால் உற்சாகமடைந்த அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாராகுவே பாதுகாப்பு அமெரிக்காவின் வேகமான தாக்குதல்களை சமாளிக்கத் தவறிய நிலையில், ஃபோலரின் பாலோகன் முதல் பாதியிலேயே இரண்டு கோல்களை அடித்து அணியின் முன்னிலையை அதிகரித்தார். பாலோகன் அடித்த ஒரு கோல் ஆஃப்சைடு காரணமாக நிராகரிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் வாய்ப்பைப் பெற்றபோது தவறவிடவில்லை. கிறிஸ்டியன் புலிசிக் இடது பக்கத்தில் இருந்து வழங்கிய துல்லியமான பாஸை கோலாக மாற்றி அமெரிக்காவுக்கு முன்னிலை அதிகரித்தார். முதல் பாதி கூடுதல் நேரத்தில் அமெரிக்கா தனது மூன்றாவது கோலையும் பதிவு செய்தது. போட்டியின் சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த மாலிக் டில்மன், பாலோகனுக்கு சிறப்பான பாஸை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 24 வயதான பாலோகன், இரண்டு பராகுவே பாதுகாப்பு வீரர்களை சமாளித்து, பந்தை தனது இடது காலுக்கு மாற்றி, கோலின் மேல் மூலையை நோக்கி அற்புதமாக அடித்தார். பராகுவே கோல்கீப்பர் ஓர்லாண்டோ கில்லால் அதைத் தடுக்க முடியவில்லை.
2 கோல்களை அற்புதமாக அடித்த பாலோகன் யார்?
நியூயார்க் நகரின் ப்ரூக்ளினில் நைஜீரிய பெற்றோருக்கு பிறந்த பாலோகன், பிறந்த ஒரு மாதத்திற்குப் பிறகு இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். லண்டனில் வளர்ந்த அவர், எட்டு வயதில் ஆர்செனல் அகாடமியில் சேர்ந்தார். இங்கிலாந்து இளைஞர் அணிகளுக்காக விளையாடியதுடன், அமெரிக்கா அண்டர்-18 அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இந்தப் போட்டியின் மூலம் அமெரிக்க அணியின் முதன்மை ஸ்டிரைக்கராக பாலோகன் தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்தினார். நீண்ட காலமாக திறமையான முன்னணி தாக்குதல் வீரரைத் தேடி வந்த அமெரிக்காவுக்கு அவர் நம்பிக்கைக்குரிய வீரராக உருவெடுத்துள்ளார். போட்டியின் 73-வது நிமிடத்தில், பராகுவே அணியின் பிரேசில் வம்சாவளியைச் சேர்ந்த மிட்ஃபீல்டர் மௌரிசியோ, பெனால்டி பகுதியின் இடது பக்கத்தில் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி ஒரு கோலை அடித்து அணியின் பின்தங்கலைக் குறைத்தார். எனினும், கூடுதல் நேரத்தின் இறுதியில் அமெரிக்கா மீண்டும் மூன்று கோல்கள் வித்தியாசத்தை எட்டியது. மாற்று வீரராக களமிறங்கிய ஜியோவன்னி ரெய்னா, தனது வலது காலின் வெளிப்புற பகுதியால் அற்புதமாக வளைத்து அடித்த ஷாட்டின் மூலம் கோல் பதிவு செய்து அமெரிக்காவின் வெற்றியை முத்திரை குத்தினார். சனிக்கிழமை நள்ளிரவு (இந்திய நேரப்படி ஞாயிறு காலை) நடைபெறவுள்ள துருக்கி - ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்னதாக, அமெரிக்கா தற்காலிகமாக 'குரூப் டி' (Group D) பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.