Select Location
All Locations
State
Region
City / District
“பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடப்பதை ஐநா வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்” - ஃபரூக் அப்துல்லா

“பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடப்பதை ஐநா வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்” - ஃபரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் ஒடுக்குமுறை குறித்தும், பலர் கொல்லப்பட்டது குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஃபரூக் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார். பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​யில் செயல்பட்டு வரும் ஜேஏஏசி எனும் அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் உயர் அதி​காரி​களால் தடை செய்யப்பட்டது. சட்​டம் - ஒழுங்கு மற்​றும் பாது​காப்பு காரணங்களுக்காக அந்த அமைப்பு தடை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் பல்​வேறு பகு​தி​களில் போராட்​டங்​கள் வெடித்​தன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாது​காப்புப் படை​யினருட​னான மோதலின்​போது வணி​கர் ஒரு​வர் உயி​ரிழந்​தார். இதனையடுத்து ராவல​கோட் நகரில் பல இடங்​களில் மோதல்​கள் நடை​பெற்​றன. இதில் ஏராள​மானோர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, “பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி ஒரு கடினமான சூழலில் உள்ளது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள அந்தப் பகுதியில் இன்று ஒடுக்குமுறை நடைபெறுகிறது. பலர் உயிரிழந்துள்ளனர். எனினும், இது குறித்த முழு விவரங்கள் தெரியவில்லை. எனவே, ஐக்கிய நாடுகள் சபையிடமும் அதன் மனித உரிமைகள் ஆணையத்திடமும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். அவர்கள் அங்கு நேரில் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்து, அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசு, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை இன்னும் வழங்காதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீராக இல்லை. நாங்கள் மனிதர்கள் என்பதையும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்தியாவுடன் இணைந்தோம் என்பதையும் அவர்கள் உணரும்போதுதான் நிலைமை சீராகும். அந்த நிபந்தனைகள் மறு ஆய்வு செய்யப்பட்டு எங்கள் கண்ணியம் மீட்டெடுக்கப்பட வேண்டும். நாங்கள் எத்தகைய சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றுகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை. அதிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆளுநரிடம் இருக்கக்கூடாத பெரும்பாலான அதிகாரங்கள் அவரிடமே உள்ளன. அவர் டெல்லியால் நியமிக்கப்பட்டவர் மட்டுமே. ஆனால், இங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு உள்ளது.” என தெரிவித்துள்ளார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News