மின்வெட்டு பிரச்சினையில் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் சாலைகளில் போராட்டம் நடக்கிறது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு
சென்னை: மின்வெட்டு பிரச்சினையில் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் சாலைகளில் போராட்டம் நடத்தப்படுகிறது என்று அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பசுமை ஆற்றல்மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை சார்பாக நடைபெற்ற 25-வது ஆண்டு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக சில துறைகள் எதிர்பார்த்த அளவிலான முன்னேற்றம் அடையவில்லை. ஆனால் அடுத்த 30 ஆண்டுகள் இந்த அரசு எதை நோக்கி பயணிக்கப் போகிறது என்பது குறித்து பல திட்டங்களை வைத்திருக்கிறோம். மின் துறையில் முதலீட்டாளர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புகளை வழங்கிவருகிறோம்.
முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை இந்த அரசு செய்து தரும். மின்னுற்பத்தி மட்டும்தான் தனியாருக்கு செல்லும். மற்ற அனைத்து கட்டமைப்புகளும் தமிழக மின் வாரியத்திடம் இருக்கும். இரவு எங்கெல்லாம் மின்தடை ஏற்பட்டுள்ளது. எவ்வளவு நேரத்தில் சரி செய்யப்படுகிறது என கேட்டறிந்து வருகிறேன். ஒரு சிலர் வேண்டுமென்றே ஃபியூசை பிடுங்கி மின்வெட்டை ஏற்படுத்துகிறார்கள்.
அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி இருந்ததால் ஒரு சிலர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பெரம்பூரில் 2 தெருவில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படுகிறது. வேண்டுமென்றே சிலர் மின்வெட்டை ஏற்படுத்துகிறார்கள். ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் சாலைகளில் போராட்டம் நடத்தப்படுகிறது. வேண்டுமென்று மின் வெட்டு ஏற்படுத்தும் நபர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
உடனடி தீர்வு சிசிடிவி இல்லாத இடங்களில் பொதுமக்கள் சந்தேகப்படும் நபர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். மின்னகம் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வரக்கூடிய புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது. மின் துறையில் உள்ள அனைத்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள். இரவு கண்காணிப்புப் பணியில் அதிக நபர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.