மம்தா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் விசாரணை
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் 80 இடங்களில் மட்டுமே திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற டிஎம்சி எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் 70 பேர் பங்கேற்றதாக மம்தா சமர்ப்பித்த ஆவணத்தில், பல எம்எல்ஏ.க்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் பானர்ஜியின் இல்லத்துக்கு கடந்த வாரம் சென்ற சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று மம்தாவின் வீட்டுக்கு வந்த 5 பேர் கொண்ட சிஐடி அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இதுவரை 13 டிஎம்சி எம்எல்ஏ.க்களிடம் சிஐடி போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில் 3 எம்எல்ஏ.க்கள், கூட்டப் புத்தகத்தில் இருப்பது தங்களது உண்மையான கையெழுத்து இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும், கேன்னிங் பூர்பா தொகுதி எம்எல்ஏ அந்தக் கூட்டத்திலேயே கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து, மே 6-ம் தேதி நடந்த கூட்டத்தின் அசல் புத்தகத்தைக் கொண்டு வந்து ஆஜராகுமாறு அபிஷேக் பானர்ஜிக்கு சிஐடி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.