Select Location
All Locations
State
Region
City / District
திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ - ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ - ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

திருச்சி: நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை, மதிமுக எம்.பி.யான துரை வைகோ வரவேற்றார்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், இன்று அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க திருச்சிக்கு வந்துள்ளார்.

முதல்வரான பின்னர் திருச்சிக்கு முதன்முறையாக வரும் முதல்வர் ஜோசப் விஜய்யை வரவேற்பதற்காக தவெகவினர் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வரின் வருகைக்கான மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

திருச்சி விமான நிலையத்துக்கு இன்று மதியம் 2.45 மணியளவில் வந்தடைந்த முதல்வர் விஜய்யை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வரவேற்றார். துரை வைகோ திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவின் முக்கிய தலைவரான துரை வைகோ முதல்வர் விஜய்யை வரவேற்றது ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.

முன்னதாக, விஜய் முதல்வரான பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதன்பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில், துரை வைகோ விஜய் குறித்து பாசிட்டிவாக பேசி வருகிறார். மேலும், தவெகவும் ஒரு திராவிட இயக்கம் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்யை வரவேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் முதன்முறையாக திருச்சிக்கு வருகை தந்துள்ளார். அதனால், இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக நான் அவரை வரவேற்றேன். அடுத்த சில நாட்களில் முதல்வரை சந்திக்கும் போது திருச்சி தொகுதியின் கோரிக்கைகளை வலியுறுத்துவேன்.

எங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் துரதிர்ஷ்டவசமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம், அதனால் எங்களால் தவெக அரசுக்கு ஆதரவளிக்க முடியாத சூழல் உள்ளது. எங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற ஜனநாயக சக்திகள் தவெகவுக்கு ஆதரவளித்துள்ளன. அதனை நாங்கள் வரவேற்கிறோம். மக்கள் தவெகவை தனிப்பெரும் கட்சியாக ஆக்கியுள்ளனர். அதனை மதிக்க வேண்டும். ஆறு மாத காலம் இந்த ஆட்சியின் செயல்பாடுகளை பார்க்க வேண்டும்.

மதிமுக எந்தக் கூட்டணியில் தொடர்வது என்பது குறித்து ஜூன் 27-ல் நிர்வாகக் குழுவை கூட்டியுள்ளோம். அதில் நிர்வாகிகள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் எந்த கூட்டணியில் இடம்பெறுவது என முடிவெடுப்போம்.

ஒரு கட்சியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மற்ற கட்சிக்கு செல்வது ஜனநாயக உரிமை. திருச்சி விமானநிலைய ஓடுதள விரிவாக்கம் குறித்து டெல்லியில் அதிகாரிகளை சந்தித்து, நிதியை வழங்கும்படி கோரிக்கை வைத்தேன்” எனத் தெரிவித்தார்.


Hindu Tamil 44 minutes ago
Home Flash News