தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல்: ஓய்ந்தது பிரசாரம்; விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை!
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த ஒரு மாதமாக தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்தனர். இறுதி நாளான நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை மாவட்டத்திற்கு உள்பட்ட சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் இறுதிகட்ட பரப்புரை மேற்கொண்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் பரப்புரை செய்தார். அதே போன்று தவெக தலைவர் விஜய், சென்னையில் சைதாப்பேட்டை, நந்தனம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் பரப்புரையை நிறைவு செய்தார்.
நேற்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டம், சாலை வலம் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 126-இன் கீழ் ஏப்ரல் 21 மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடியும் வரை (ஏப்ரல் 23) திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ்-ஆப், முகநூல், எக்ஸ் போன்ற எவ்வித மின்னணு சாதனங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். மேலும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பணிமனைகளை வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே மட்டுமே அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பணிமனையில் 2 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், தேவையற்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.