மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஹசீனா சையத்தை நீக்கி கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி கருப்பு உடை அணிந்து, மகிளா காங்கிரஸார் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் கூறியதாவது: மேற்கு வங்கம், கேரளம், அசாமில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவிகள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம், புதுச்சேரியில் மகிளா காங்கிரஸ் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அல்லது மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுவதற்கான அனைத்து பணிகளையும் நான் மேற்கொண்டு வந்தேன். ஆனால், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் யாருக்கும் வாய்ப்பளிக்கவில்லை. மாணவர் பருவம் முதல் கடந்த 30 ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்து வருகிறேன். நாங்கள் வாய்மூடி இருப்பதாலேயே எங்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பதில் சொல்லியே தீர வேண்டும்.
மேலூர் தொகுதி நான் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இப்படிச் செய்கிறீர்களா? கடந்த 5-ம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் எனக்குப் போன் செய்து, மேலூர் தொகுதி உனக்குத்தான் என்று கூறி ஆவணங்களைத் தயார் செய்யச் சொன்னார். ஆனால், கடைசி நேரத்தில் வேறு ஒருவரை அறிவித்துவிட்டார்கள். தேசியத் தலைவரும், மாநிலத் தலைவரும் இணைந்து எங்களுக்குத் துரோகம் செய்துள்ளார்கள். நாங்கள் ஏற்கெனவே ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டுதான் இங்கு வந்துள்ளோம். நான் கட்சியை விட்டுச் செல்லவும் தயாராக உள்ளேன்.
நாங்கள் மதிக்கும் தலைவர் ராகுல் காந்தியை விமான நிலையத்தில் சென்று வரவேற்கக் கூட செல்வப்பெருந்த கைக்கு மனமில்லை. அவர் கோட்சேவைப் போல செயல்படுகிறார், இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து ஹசீனா சையத் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மாநில மகிளா காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஹசீனா சையத், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், பதவியிலிருந்து அவர் நீக்கப்படுகிறார். கட்சியின் விதிமுறைகளின்படி, தேவைப்படும் பட்சத்தில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.