Select Location
All Locations
State
Region
City / District
‘துரந்தர் 2’ படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

‘துரந்தர் 2’ படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: ‘துரந்தர் 2’ திரைப்படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ‘துரந்தர் 2’. இத்திரைப்படம் கடந்த மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த டி. ராகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில், இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

தேர்தலுக்கு பின் துரந்தர் 2 திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மதாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், தமிழகத்திலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு கொள்கைகளை இப்படம் பாராட்டும் வகையில் உள்ளதால் இத்திரைப்படத்தின் திரையிட்டிருப்பது, நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று வாதிட்டிப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், திரைப்படத்தின் எந்தப் பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதைக் குறிப்பிடவில்லை என தெரிவித்தனர். மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கிய சான்றிதழை மனுதாரர் எதிர்க்கவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.


Hindu Tamil 1 month ago
Home Flash News