989 பில்லியனர்கள்! 700 லட்சம் கோடி சொத்து மதிப்பு... பணக்காரர்களின் கூடாரம் அமெரிக்கா; டாப் லிஸ்டில் இந்தியா
உலக அளவில் அதிக பில்லியனர்களை கொண்ட நாடுகள் லிஸ்ட் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலக அளவில் அதிக பில்லியனர்களை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இங்கு 989 பில்லியனர்கள் உள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு $8.4 டிரில்லியன், இந்திய மதிப்பில் சுமார் ரூ.700 லட்சம் கோடி ஆகும். இவர்களில் தென்னாப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த, உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மாஸ்க் முக்கியமானவர் ஆவார்.
இந்த பட்டியலில் 539 பில்லியனர்களுடன் சீனா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு $2.2 டிரில்லியன், இந்திய மதிப்பில் சுமார் 183 லட்சம் கோடி ரூபாய் ஆகும். கடந்த ஆண்டு இருந்த 495 பில்லியனர்கள் என்ற எண்ணிக்கையை முறியடித்து, சீன பில்லியனர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாங் யிமிங் தற்போது சீனாவின் மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
இந்தியா
அதிக பணக்காரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 229 பில்லியனர்களுடன் இந்தியா உலக அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு $1 டிரில்லியன், சுமார் 83 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவின் மிகச்சிறந்த பணக்காரராகத் தொடர்ந்து நீடிக்கிறார்.
ஜெர்மனி
ஜெர்மனி 212 பில்லியனர்களுடன் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு $1 டிரில்லியன் ஆகும். கடந்த ஆண்டு 171 பில்லியனர்களும், $793 பில்லியன் ஒட்டுமொத்த சொத்து மதிப்பும் இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜெர்மனி பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. $67.2 பில்லியன் சொத்து மதிப்புடன் டைட்டர் ஸ்வார்ஸ் ஜெர்மனியின் மிகப்பெரிய பணக்காரராகத் திகழ்கிறார்.
ரஷ்யா
ஃபோர்ப்ஸ் இதழின், அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலின்படி, 147 பில்லியனர்களுடன் ரஷ்யா ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு $649 பில்லியன் ஆகும். கடந்த ஆண்டு 140 பில்லியனர்களும், $580 பில்லியன் சொத்து மதிப்பும் இருந்த நிலையில், இந்த ஆண்டு ரஷ்ய பில்லியனர்களின் எண்ணிக்கை மற்றும் செல்வம் ஆகிய இரண்டுமே அதிகரித்துள்ளன. $37 பில்லியன் சொத்து மதிப்புடன் அலெக்ஸி மொர்தாஷோவ் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரர்களாக உருவெடுத்துள்ளனர். இந்த பட்டியலில் இத்தாலி, கனடா, ஹாங்காங், பிரேசில், தைவான் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.