இந்தியாவில் கட்டுப்பாடுகள் கொண்ட கோயில்கள்: சபரிமலை வழக்கில் பட்டியலிட்ட மத்திய அரசு
புதுடெல்லி: இந்தியாவில் புஷ்கரின் பிரம்மா, அசாமின் காமாக்யா ஆலயம் உள்ளிட்ட கோயில்களின் மரபுகளை மத்திய அரசு பட்டியலிட்டது. இதை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் சபரிமலையில் பெண்கள் நுழையும் வழக்கில் நீதிபதிகள் அமர்வின் முன் தெரிவித்தது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி பி.வி.நாகரத்தினா அடங்கிய 9 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. பெண்கள் மீதான தடையை மத்திய அரசும் ஆதரித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசு நிலைப்பாட்டை ஆதரித்து வழக்காடினார். இதில், நாட்டின் பிற ஆலயங்களில் பின்பற்றப்படும் மரபுகளைச் சுட்டிக்காட்டினார்.
இந்த வகையான நடைமுறைகள் பாலினப் பாகுபாட்டின் ஒரு பகுதியல்ல என்றும், மாறாக அவை மதச்சடங்குகள், நம்பிக்கை மற்றும் விஸ்வாசம் ஆகியவற்றின் ஒரு பகுதியே என்றும் துஷார் வாதிட்டார். இது நீதிமன்றத்தின் நீதித்துறை மறு ஆய்வு வரம்புக்குள் வராது என்றும் அவர் குறிப்பிட்டார். கோயில்களின் இந்தச் சடங்குகள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன எனவும் விளக்கினார். இது குறித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தன் வாதத்தில் பேசுகையில், ‘பண்டைய காலங்களிலிருந்தே பெண்களைப் போற்றி வணங்கும் கொள்கையைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருவது இந்து மதமே ஆகும். இந்து மதம் பெண்களை ஆண்களுக்குச் சமமாக அங்கீகரித்தது மட்டுமல்லாமல், ஆண்களை விட மிக உயர்ந்த அந்தஸ்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது. உலகிலேயே பெண் தெய்வங்கள் இந்தியாவில்தான் அதிகமாக வழிபடப்படுகின்றனர்.
ஆண்களே அந்தப் புனிதமான ‘பெண் தெய்வங்களின்’ பாதங்களைத் தொட்டு வணங்கி பக்தர்களாகத் திகழும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே என்று உறுதியாகக் கூறலாம். பாலின அடிப்படையில் ஆலயத்துக்குள் நுழைவதை அனுமதிப்பது என்பது ‘பாலினப் பாகுபாடு’ சார்ந்த விவகாரம் அல்ல. மாறாக, அது மதச்சடங்குகள், நம்பிக்கை மற்றும் விஸ்வாசம் சார்ந்த விவகாரமே. எனவே, அது நீதிமன்றத்தின் நீதித்துறை மறு ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டது என்று நிரூபிக்கும் பல உதாரணங்கள் உள்ளன’ எனத் தெரிவித்தார்.