திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, கொமதேக கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், இன்று விசிக தொகுதிப் பங்கீடும் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, திமுக கூட்டணியிலுள்ள விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 6 பொதுத் தொகுதிகள், 2 தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இன்று (மார்ச் 24) இந்த தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை கூடுதல் தொகுதிகளைப் பெறுவதில் உறுதியாக இருந்த விசிக 2 தொகுதிகளை அதிகமாக பெற்றிருக்கு.
திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸுக்கு 28, விசிகவுக்கு 8, இந்திய கம்யூனிஸ்ட் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொமதேக 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.