“அபிஷேக் சர்மா எதிர்கொண்ட சவால்களை சூரியவன்ஷியும் எதிர்கொள்ள நேரிடும்” - இர்பான் பதான் எச்சரிக்கை
இந்தியாவின் இளம் சூப்பர் ஸ்டாரான அதிரடி இளவரசன் வைபவ் சூரியவன்ஷி, நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மா சந்தித்தது போன்ற சவால்களை வரும் ஐபிஎல் தொடரில் சந்திக்க நேரிடும் என்று இர்பான் பதான் எச்சரித்துள்ளார். தன் அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே வைபவ் சூரியவன்ஷி குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக 35 பந்துகளில் சதமெடுத்து அதிர்ச்சியளித்தார். யு-19 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்களை விளாசினார். அன்று அவரை ஒன்றுமே செய்ய முடியவில்லை. இங்கிலாந்தின் இளம் பவுலர்கள் ஒரு கட்டத்தில் அவரை அவுட் செய்யும் முயற்சியைக் கைவிட்டு விட்டனர்.
இதோடு அந்தத் தொடரில் 30 சிக்சர்களை விளாசி உலக சாதனை படைத்தார் சூரியவன்ஷி. இது போன்ற வீரர்களை முறியடிக்க எப்போதும் எதிரணிகள் நிச்சயம் உத்திகளை வகுக்கும். அபிஷேக் சர்மாவை அப்படித்தான் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி தூக்கி அடிக்கச் செய்து அவரும் குறிபார்த்து டீப் கவரில் பீல்டர் கையில் கொடுத்தது நடந்தது. அதே போன்ற சிலபல உத்திகளை வைபவ் சூரியவன்ஷிக்கு எதிராகவும் எதிரணிகள் தீட்டியிருப்பர்கள் ஆகவே அவர் எச்சரிக்கையுடன் ஆட வேண்டும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார். ஜியோ ஹாட்ஸ்டாருக்கு இர்பான் பதான் கூறும்போது, “வெற்றியோ தோல்வியோ அது சூரியவன்ஷி தலைக்கு ஏறாமல் இருக்க வேண்டும். அவருக்கு 15 வயதுதான் ஆகிறது, இந்த வயது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான வயது. இந்தக் கட்டத்தில் ஒரு 20 ஆண்டுகால தொழில்முறை கிரிக்கெட் அவரை எதிர்நோக்குகிறது.
சமகால கிரிக்கெட் வாழ்க்கை முன்பு போல் நீண்ட காலம் செல்லக்கூடியது, குறுகிய காலம் தான் ஆட முடிகிறது, இருப்பினும் 6-8 ஆண்டுகள் ஆடினாலே நிறைய சாதிக்க முடியும். ஆனால் வைபவ் சூரியவன்ஷிக்கு நிச்சயம் ஒரு நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது. யாராவது ஒரு மூத்த வீரர் ராகுல் திராவிட் போல் அவருடன் இருந்து அவரை நெறிப்படுத்தி வழிநடத்த வேண்டும். அதே வேளையில் அவர் தன் ஆட்டத்தையும் மேம்படுத்த வேண்டும். இந்த ஐபிஎல் சீசனில் எதிரணிகள் நிச்சயம் அவருக்கு எதிராக கடும் சவால் அளிக்கும் உத்திகளை ஏற்கெனவே வகுத்திருப்பார்கள். அதாவது சீராக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அவர் மட்டை ரீச் ஆகாதபடிக்கு வீசுவார்கள். அதை அவர் ஆட்டமிழந்தாலும் பரவாயில்லை என்று எதிர்கொள்ள வேண்டும். அபிஷேக் சர்மா அத்தகைய சவால்களை உலகக்கோப்பைப் போட்டிகளில் எதிர்கொண்டதைப் பார்த்தோம். ஆகவே அத்தகைய சூழல்களை வைபவ் எப்படி எதிர்கொண்டு ஆட்கொள்ளப்போகிறார் என்பதே முக்கியம்.” இவ்வாறு கூறினார் இர்பான் பதான்.