டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
அகமதாபாத்:
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.
முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
சூப்பர் 8 சுற்றில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
இந்நிலையில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் மார்கிராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை இன்று (22-ம் தேதி) சந்திக்கிறது. அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்திலும், நமீபியாவை 93 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்திலும், நெதர்லாந்தை 17 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
தென் ஆப்பிரிக்க அணியும் இந்தத் தொடரில் தோல்வியை தழுவாமல் 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளதால், இந்திய அணி மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.
தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 3 ஆட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அவர் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியம்.
அபிஷேக் சர்மா 2 முறை சுழற்பந்து வீரருக்கு டக் அவுட் ஆனார். எனவே தென் ஆப்பிரிக்காவும் அவரை உடனே வெளியேற்ற சுழற்பந்து வீச்சாளரை தொடக்கத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.