உக்ரைன் தலைநகரில் ரஷ்யா குண்டுமழை: 4 ஆண்டுகளாக தொடரும் மோதல்!
கீவ்: உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் இன்று (பிப்.22) அதிகாலை விடியல் பொழுதுக்கு முன்பாக பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்டவற்றை கொண்டு ரஷ்யா மிக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக, இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர். சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தியாளர்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கீவ் நகரில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறும் சப்தத்தை கேட்டதாக தெரிவித்தனர். அதற்கு முன்பாக வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி கீவ் நகரில் ஒலித்துள்ளது.
“பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தலைநகரை எதிர் தரப்பு தாக்குகிறது” என கீவ் ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமூர் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்தார். மேலும், மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். அதையடுத்து உக்ரைன் முழுவதும் வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை அந்நாட்டு வான்படை விடுத்தது. இந்த தாக்குதலில் குடியிருப்புகளின் மேற்கூரை தீ பிடித்து எரிந்ததாக தகவல். ரஷ்யா-உக்ரைன் மோதல்: கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அன்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அது முதல் இதுநாள் வரையில் ஏவுகணைகள், ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
குறிப்பாக கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது இரவு நேரங்களில் தாக்குதல் நடத்துவதை ரஷ்ய அதிகரித்துள்ளது. இப்போது அங்கு குளிர் அதிகமாக உள்ளது. தட்பவெப்ப சூழல் -10 டிகிரி செல்சியஸ் என உள்ளது. இந்த சூழலில் ராணுவ தளங்கள்தான் ரஷ்யாவின் முதல் டார்க்கெட். இந்த தாக்குதல் காரணமாக உக்ரைனின் வடக்கு எல்லையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை போலாந்தும் உறுதி செய்துள்ளது.
இதுவரையிலான மோதலில் உக்ரைனின் 5 பிராந்தியங்களை ரஷ்யா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இருதரப்பிலும் மக்களின் உயிரிழப்புகள், தளவாடங்கள் இழப்பு ஏற்பட்ட சூழலிலும் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி முதல் உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் அதிகாரிகள் மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை