வெளிநாட்டிற்கு தங்கம் ஏற்றுமதியில் மோசடி; 5 சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு: 2020 முதல் 3 ஆண்டுகள் மோசடி அம்பலம்
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ததில் பெருமளவு மோசடிகள் நடந்த விவகாரத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 5 சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட 13 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். சென்னை விமான நிலைய கார்கோ பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு, மத்திய வருவாய் புலனாய்வு துறை எனப்படும் டிஆர்ஐ அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்பட இருந்த 4 சரக்குகள் பில்களில் முரண்பாடுகள் இருந்ததை டிஆர்ஐ கண்டுபிடித்தது. இதையடுத்து அந்த 4 பில்களுக்கான தங்க நகைகள் பார்சல்களை விமானங்களில் ஏற்றுவதை டிஆர்ஐ தடுத்து நிறுத்தியது. அதோடு அந்த தங்க நகைகளை ஆய்வு செய்தபோது பித்தளை மற்றும் செம்பு நகைகளுக்கு தங்கம் முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்று தெரிய வந்தது. மற்றொரு சரக்கு பில்லில் இருந்த நகைகள் தரம் குறைந்த 21 கேரட் நகைகள் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.