Select Location
All Locations
State
Region
City / District
லார்ட்ஸ் டெஸ்ட்: பேட் செய்யாத இமாம் உல் ஹக் மீது கடும் நடவடிக்கை - ஆகிப் ஜாவேத் உறுதி

லார்ட்ஸ் டெஸ்ட்: பேட் செய்யாத இமாம் உல் ஹக் மீது கடும் நடவடிக்கை - ஆகிப் ஜாவேத் உறுதி

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்து இங்கிலாந்து தொடரை வென்றதையடுத்து, இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் காயத்தினால் களமிறங்காமல் தவிர்த்த இடது கை தொடக்க வீரர் இமாம் உல் ஹக் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கைப் பாயும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உயர் செயல்திறன் இயக்குநரும் முன்னாள் ஸ்விங் பவுலருமான ஆகிப் ஜாவேத் உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் அவர் இது தொடர்பாகக் கூறும்போது தான் இமாம் உல் ஹக் மீது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறேன் என்று கூறினார். ஒன்று காயம் என்றால் லெவனில் இருக்கக் கூடாது, விலகியிருக்க வேண்டும், வேறு வீரருக்கு வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால் லெவனில் இருப்பேன், பேட் செய்ய இறங்க மாட்டேன் என்ற ரீதியில் இமாம் உல் ஹக் செயல்பட்டது பாகிஸ்தான் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் கோபத்தைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக ஆகிப் ஜாவேத் மேலும் கூறும்போது, "முன்பெல்லாம் வீரர்கள் காயமடைந்தாலும், கட்டுப் போட்டுக் கொண்டாவது தொடர்ந்து விளையாட முயற்சிப்பார்கள். நாங்கள் இது குறித்து நடவடிக்கை எடுப்போம். தசைப்பிடிப்பு காரணமாக இரு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் செய்ய முடியாமல் போனது எப்படி? அவர் போராடிப் பார்த்திருக்க வேண்டும். அவர் விசாரணைக்கு ஆளாக நேரிடும்; அவர் காயத்தை போலியாகக் காட்டினார் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அத்தகைய தசைப்பிடிப்பு ஒருவரை முழுமையாகப் பேட்டிங் செய்வதிலிருந்து தடுத்துவிடாது” என்று கண்டிப்புடன் கூறினார்.

லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தாயகம் திரும்பும்படி பிசிபி (PCB) அழைத்த 7 வீரர்களில் இமாமும் ஒருவர்; அப்போட்டியில் அவர் பேட்டிங் செய்யாதது பரவலான விமர்சனத்திற்குள்ளானது. போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்குச் சற்று முன்பு, அவரது இடது கால் தசையில் (Calf Muscle) கிழிவு ஏற்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஆட்டத்தில் அவர் பங்கேற்பது மருத்துவ ஆலோசனையைப் பொறுத்தே அமையும் என்றும் பிசிபி அறிக்கை வெளியிட்டது.

ஆகவே ஆகிப் ஜாவேத், இமாம் உல் ஹக் மீது மட்டுமல்ல தாயகம் திரும்புமாறு அழைக்கப்பட்ட 7 வீரர்கள் மீதும் ஒட்டுமொத்தமாக நடவடிக்கை எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News