Select Location
All Locations
State
Region
City / District
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூட திட்டமா? - அன்புமணி கண்டனம்

படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூட திட்டமா? - அன்புமணி கண்டனம்

சென்னை: “தமிழ்நாட்டில் சர்க்கரைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்த படாளம் சர்க்கரை ஆலையை மூட ஏதேனும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் அக்டோபர் 1-ம் தேதி முதல் அரவைப் பருவம் தொடங்கவுள்ள நிலையில், படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஒப்பந்த பணியாளர் நியமனம் உள்ளிட்ட எந்தப் பணிகளும் இன்னும் தொடங்கப்படவில்லை. நாடு முழுவதும் சர்க்கரைக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில், கூட்டுறவு ஆலைகள் மூலம் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை தமிழக அரசின் சர்க்கரைத் துறை தவற விடுவது சரியானதல்ல.

செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் 1961ம் ஆண்டில் தொடங்கப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தமிழ்நாட்டின் பழமையான மற்றும் அதிக அரவைத் திறன் கொண்ட சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு 2,500 டன் கரும்பு அரவைத் திறன் கொண்ட படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சர்க்கரை உற்பத்தி நடைபெறும். அதற்கான முதல் நடவடிக்கையாக ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை ஜூலை மாதத்தில் தொடங்கும். ஆனால், நடப்பாண்டில் ஜூலைக்குப் பிறகு ஆகஸ்ட் மாதமும் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் பிறந்து விட்ட நிலையில், இன்று வரை ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை தொடங்கவில்லை. அதனால் படாளம் ஆலையை மூட அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி, நிதிப் பற்றாக்குறை காரணமாக படாளம் சர்க்கரை ஆலையை நடப்பாண்டில் இயக்கும் முடிவை அரசு கைவிட்டு விட்டதாக வெளியாகியுள்ள செய்திகளும் இந்த ஆலையை நம்பியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளையும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் தொழிலாளர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் சர்க்கரைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்த படாளம் சர்க்கரை ஆலையை மூட அரசு முடிவு செய்திருந்தால், அதற்கு ஒரே ஒரு நியாயமான காரணம் கூட கிடையாது. அதனால், அப்படி ஏதேனும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும்.

படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 29,632 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். திண்டிவனம், வானூர், மேல்மருவத்தூர், படாளம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 10 கரும்பு கோட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 62,327 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் கரும்பு இந்த ஆலைக்கு வழங்கப்பட வேண்டும். அதன்படி, தொடக்கத்தில் ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் கரும்பு அரவையுடன் உற்பத்தியைத் தொடங்கிய படாளம் ஆலை, ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்து சாதனை படைத்தது. ஒரு கட்டத்தில் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்துடன் கரும்பு அரவை படிப்படியாக குறைக்கப்பட்டு, 2001-ம் ஆண்டில் படாளம் சர்க்கரை ஆலை மூடப்பட்டது. அதன் பின் ஆலையை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், 2008- 09ம் ஆண்டுகளில் பாமக சார்பில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அடுத்தடுத்து இரு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பயனாக அப்போதிருந்த அரசு ரூ.34 கோடியில் ஆலையை சீரமைத்து 2010-ம் ஆண்டு முதல் இயக்கத் தொடங்கியது. அதன்பின் கரும்பு அரவை 2022- 23ம் ஆண்டில் 2 லட்சம் டன் என்ற அளவைக் கடந்தது. அதன்பின், கடந்த இரு ஆண்டுகளாக கரும்பு அரவை 69,360 டன், 53,928 டன்னாக குறைந்தது. நடப்பாண்டில் குறைந்தது 67,500 டன் கரும்பு அரவை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தான், அதை கைவிட்டு ஆலையை மூட முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.


Hindu Tamil 47 minutes ago
Home Flash News