“தொடர்ந்து உயரும் நூல் விலைக்கு யார் பொறுப்பு?” - மத்திய, மாநில அரசுகளுக்கு வேல்முருகன் கேள்வி
சென்னை: “நெசவுத் தொழில் நலிவடைவது என்பது ஒரு தொழில் துறையின் இழப்பு மட்டுமல்ல. தலைமுறை தலைமுறையாக இத்தொழிலை மட்டுமே நம்பி வாழும் எளிய மக்களின் எதிர்கால பிரச்சினை. மத்திய மாநில அரசுகள், நெசவுத் தொழிலை அழிக்கத் துடிக்கிறதா?. நூல் விலை உயர்வுக்கு யார் பொறுப்பு?” என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் பாரம்பரிய தொழிலான நெசவுத்தொழில் ஏற்கனவே மூலப்பொருள் தட்டுப்பாடு, மின் கட்டண உயர்வு, சந்தை மந்தநிலை போன்ற காரணங்களால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களாக நூற்பாலைகள் நூல் விலையை தொடர்ந்து படிப்படியாக உயர்த்தி, தற்போது கிலோவுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.30 முதல் ரூ.40 வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது நெசவுத் தொழில்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நூற்பாலைகள் தொடக்கத்தில் ரகங்களுக்கு ஏற்ப கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தின. அடுத்தடுத்த மாதங்களில் பருத்தி விலை ஏற்றம் மற்றும் வரத்து குறைவை காரணம் காட்டி மேலும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டது. நடப்பு மாதத்தில் மேலும் கிலோவுக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்டதால், மொத்தமாக ஒரு கிலோவுக்கு ரூ.40 வரை விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்தத் தொடர் விலை ஏற்றத்தால், நெசவு உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பழைய விலை ஒப்பந்தங்களின்படி துணிகளை உற்பத்தி செய்து கொடுக்க முடியாமல் கடுமையான நிதி இழப்பை சந்தித்து வருகின்றனர். புதிய ஒப்பந்தங்களைப் பெற முடியாமல் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறு மற்றும் குறு விசைத்தறி, கைத்தறி கூடங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.