Select Location
All Locations
State
Region
City / District
“விளையாட்டில் வளர்வோம், வெற்றியில் மிளிர்வோம்” - முதல்வர் விஜய்

“விளையாட்டில் வளர்வோம், வெற்றியில் மிளிர்வோம்” - முதல்வர் விஜய்

சென்னை: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ‘இளம் தலைமுறையினர் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வளர்த்துக் கொள்ளவேண்டும்’ என முதல்வர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனை படைத்தவருமான மேஜர் தியான் சந்த்தின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடும் இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

விளையாட்டு, பதக்கங்களை வெல்வதற்கு மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, குழு உணர்வு ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த களமாகவும் திகழ்கிறது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு உடல்தகுதி மிக அவசியம். இளம்தலைமுறையினர் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வளர்த்துக் கொள்ளவேண்டும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி, வெற்றிகளைக் குவித்து, இந்தியாவின் மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்திட இந்நாளில் வாழ்த்துகிறேன். விளையாட்டில் வளர்வோம், வெற்றியில் மிளிர்வோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


Hindu Tamil 15 hours ago
Home Flash News